×

பொதுத்தேர்வு நடக்கும் அரசு பள்ளிகளில் மேசை நாற்காலி பற்றாக்குறை

திருவள்ளூர், ஜன. 24: அரசுப் பொதுத் தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மேசை, நாற்காலிகள் பற்றாக்குறை உள்ளது. அவற்றை கொடுத்து உதவும்படி தனியார் பள்ளிகளை எதிர்பார்க்கும் நிலை பல நூறு அரசு பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் துவங்க இன்னும் 35 நாட்களே உள்ளது. மார்ச் 1 அன்று பிளஸ் 2 தேர்வு, மார்ச் 6 அன்று பிளஸ் 1 தேர்வு, மார்ச் 14 அன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக்கல்வி துறை தீவிரமாக செய்து வருகிறது.

தேர்வு மையம் அமைக்கப்படும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து முன் கூட்டியே தகவல் கொடுத்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதற்கான ஏற்பாடுகளை குறைவின்றி செய்து முடிக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர்கள் அங்கேயே தேர்வு எழுவதற்கான அனுமதி பெற்று அதற்கான ஆயத்தப் பணிகளை எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செய்து வருகின்றனர். இதில் பிரச்னை இருந்தால் போதிய செலவு செய்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் தனியார் பள்ளிகள் தனிக்கவனம் எடுத்து செயல்பட்டு வருகின்றன.

இவ்விஷயத்தில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் போதிய நாற்காலி, மேசை இன்றி திண்டாடி வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உட்கார தேவைப்படும் மேசை, நாற்காலிகளை வாடகைக்கு எடுக்கும் நிலையே பல இடங்களிலும் நீடிக்கிறது. வாடகை தொகையை எந்த கணக்கில் இருந்து எடுத்துக் கொடுப்பது என்று புரியாமல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இப்பிரச்னையை செலவு இன்றி தீர்க்க சில அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மேசை, நாற்காலிகளை கொடுத்து உதவும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களும் கைவிரித்துவிட்டால், சில அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தரையில் அமரவைத்து பொதுத்தேர்வை எழுத வைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே குறித்தநேரத்தில் சிரமம் இன்றி அவர்கள் முழுமையாகவும், அழகாகவும் எழுத முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

எனவே, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இனியாவது கல்வித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : schools ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...